07 Oct 2009 09:48:37 AM IST
நாகர்கோவில், அக். 6: தமிழக மக்கள் விரும்பினால், காலத்தின் கட்டாயம் என்றால், பாமக தலைமையில் 3-வது அணி அமையும் என்று அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய அவர் மேலும் கூறியது:
அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகியதற்கான காரணத்தை ஏற்கெனவே விளக்கியுள்ளேன். சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படும்போது இதுபோன்ற முடிவுகள் எடுக்க நேரிடுகிறது.
இத்தகைய சூழ்நிலை எங்கள் கட்சிக்கு மட்டும் நேர்ந்ததல்ல. 1990-ம் ஆண்டில் மத்தியில் சந்திரசேகர் தலைமையில் ஆட்சி நடைபெற்றபோது ராஜீவ் காந்தியின் வீட்டை வேவு பார்த்ததாக கூறி, மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை காங்கிரஸ் விலக்கிக் கொண்டது. கொள்கைரீதியாக ஆதரவை விலக்கி கொள்ளவில்லை.
1971-ல் திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடிக்கவில்லை. திமுக குறித்து சி. சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியதால் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால் என்று திமுக விலகியது. கடந்த முறை திமுகவிலிருந்து நாங்கள் வெளியேற்றப்பட்டதும் கொள்கைரீதியாக எடுக்கப்பட்ட முடிவல்ல.
அதிமுக முன்புபோல் இல்லை. அக் கட்சியில் கோஷ்டிகள் அதிகரித்துள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலில் அக் கட்சி தொண்டர்கள் பலர் திமுக கூட்டணிக்கு விலைபோயினர். தற்போது அதிமுக மிகவும் பலவீனமான கட்சியாக மாறிவிட்டது. அக் கட்சியின் தலைமைக்கு, தலைமைப் பண்பு, ஆளுமைப் பண்பு இல்லை என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. தொண்டர்களை அரவணைக்கும் போக்கும் இல்லை என்று அக் கட்சியினரே தெரிவிக்கிறார்கள்.
கூட்டணி ஏன்? தமிழகத்தில் 1967-ல் இருந்து திமுக, அதிமுக என்று இரு அணிகளாகவே இருந்து வந்தது. தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் அக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து வருகின்றன. 1996-ம் ஆண்டுவரை பாமக தனித்து போட்டியிட்டு வந்தது. அப்போதுகூட 4 இடங்களில் வெற்றி பெற்றிருந்தோம்.
மூன்றாவது அணி தமிழகத்தில் உருவாக வாய்ப்பில்லை என்ற நிலையில் 1996-க்குப்பின் கூட்டணி சேரவேண்டிய நிர்பந்தம் உருவானது.
3-வது அணி: தமிழகத்தில் தனித்துப் போட்டியிட அனைத்துக் கட்சிகளும் முன்வந்து கையெழுத்திட்டால் நான் முதலில் கையெழுத்திடுவேன். காலத்தின் கட்டாயம் ஏற்பட்டால், மக்கள் விரும்பினால் தமிழகத்தில் பாமக தலைமையில் 3-வது அணி அமையும்.
கடந்த 20 ஆண்டுகளாக சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகளுடன் ஆக்கபூர்வ வழியில் செயல்படும் பாமகவைப்போல் வேறு கட்சிகள் உள்ளதா? பாமகவுக்கு திமுகவின் கதவு மூடியிருப்பதாக சொல்ல முடியாது. சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் உள்ளது. எனவே கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் கட்சி முடிவு எடுக்கும்.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது கூட்டணியில் இருந்த நாங்கள்தான் அதிகமாக அக் கட்சியை விமர்சித்தோம். திமுக கூட்டணியில் இருந்தபோதும் அதையே செய்தோம். கடந்த தேர்தலில் திமுக தில்லுமுல்லுகளை செய்து எங்களை தோற்கடித்தது. அதே நேரத்தில் ஒன்பது தொகுதிகளில், ஆறு தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற நாங்கள்தான் காரணம்.
எந்த கூட்டணி சிறந்தது? அதிமுகவிலிருந்து பாமக விலகியது கட்சியின் நிர்வாகக் குழு எடுத்த முடிவு. அந்த முடிவுக்கு நான் கட்டுப்பட வேண்டும். சொந்த காரணங்களுக்காக கூட்டணியிலிருந்து வெளியேறியதாக கூறமுடியாது.
திமுக, அதிமுக கூட்டணியில் எது சிறந்தது என்பது குறித்தும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், அதிமுக தலைமையுடன் தொடர்பு கொள்ளவே முடியாது. திமுக தலைமையுடன் தொடர்பு கொள்ள முடியும்.
முல்லை பெரியாறு அணை பிரச்னை: முல்லை பெரியாறு அணை பிரச்னையில் புதிதாக அணை கட்டுவதற்காக கேரள அரசு ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தோம். இந்தப் பிரச்னையில் 2006-ம் ஆண்டு பிப்ரவரி 27-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோது, தமிழகத்தில் அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதா, நிர்வாக ஆணையத்தை அமைத்து நீர்மட்டத்தை உயர்த்தியிருக்கலாம். ஆனால், அப்படி எதையும் செய்யவில்லை. தற்போது இந்தப் பிரச்னையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளது காலம் கடந்த முடிவாக இருந்தாலும் நாங்கள் வரவேற்கிறோம்.
தமிழக நலனுக்கு எதிராகவே மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் செயல்படுகிறார். நதிநீர் இணைப்புக்கு உடன்பாடு இல்லை என்று இப்போது அவர் கூறுகிறார்.
கட்சிகளுக்கு வேண்டுகோள்: கேரளத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் எதிரான கொள்கைகளையே கொண்டுள்ளனர். ஆனால், அவர்களை சகோதரர்களாகவே தமிழர்கள் பாவிக்கிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து 44 ஆறுகள் உற்பத்தியாகின்றன. அதில், 3 ஆறுகள் மட்டுமே கேரளத்துக்கு பயன்படுகின்றன. மற்றவை அரபிக் கடலில் கலக்கின்றன.
இந்நிலையில் தமிழர்களது பணத்தில் அமைக்கப்பட்ட நெய்யார் இடதுகரை கால்வாய்க்கு 2004 முதல் கேரள அரசு தண்ணீர்விட மறுக்கிறது.
தற்போது எழுந்துள்ள பிரச்னைகள் காரணமாக தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் தமிழகத்துக்கு சொந்தமானவை என்று இங்குள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் குரல் எழுப்ப வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.
சமச்சீர் கல்வியைக் கொண்டு வர வேண்டும் என்றும் கல்விக் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழக மாணவர் சங்கம் சார்பில் தென்மாவட்டங்களில் மாநாடு நடத்தப்படுகிறது. கல்வி புரட்சி, பண்பாட்டு புரட்சி ஏற்பட வேண்டும் என்று கூறி வருகிறோம். தமிழகத்தில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது சமச்சீர் கல்வி கிடையாது. தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்பதை வரவேற்கிறோம். ஆனால், அது நடக்காது என்பதையும் கூறிவருகிறோம் என்றார் ராமதாஸ்.
பாமக தலைவர் கோ.க. மணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment