கிராமங்கள் தோறும் அரசு நர்சரி பள்ளிகள்
தினமணி : 13 Sep 2009 01:34:00 AM IST
சேலம், செப். 12: மாணவர்கள் கல்வி அறிவில் சமச்சீர் பெற்றிட தமிழகத்தில் கிராமங்கள் தோறும் நர்சரிப் பள்ளிகளை அரசு தொடங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார். சேலத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: வரும் கல்வியாண்டில் 1 முதல் 6 வரையிலான வரையிலான வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படும் என்றும் 2011-12 ஆம் ஆண்டில் மற்ற வகுப்புகளுக்கு இது விரிவுபடுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே சீரான, தரமான கல்வியை வழங்கும் முக்கியக் கடமை மாநில அரசுக்கு உள்ளது. சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த பொதுப் பாடத்திட்டமும், பொதுப் பாடநூல் மட்டும் போதாது. எது சமச்சீர் கல்வி உண்மையான சமச்சீர் கல்வி என்பது பாடத்திட்டத்தில் மட்டுமல்ல பள்ளிகளின் அடிப்படை, கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை, அவர்களின் திறமை, தேர்வு முறை, பள்ளி நிர்வாகம் போன்றவை மற்றும் அது தொடர்பானவற்றை உள்ளடக்கிய பெருந்திட்டம் என்று முத்துக்குமரன் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் தமிழகத்தில் பிரீகேஜி, எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஆகிய 3 ஆண்டு பள்ளி முன்பருவக் கல்வியை வசதி படைத்தவர்களின் குழந்தைகள் பெறுகின்றனர். இவர்களுடன் முதலாம் வகுப்பில் பள்ளியில் சேரும் மற்ற குழந்தைகள் அறிவுத் திறனில் மாறுபாடுகளுடன் காணப்படுகின்றனர். எனவே மழலையர் பள்ளிகளை கிராமங்கள் தோறும் அரசாங்கமே தொடங்கி நடத்த வேண்டும். முத்துக்குமரன் கமிட்டியின் பரிந்துரையிலும் இது வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் பயிற்று மொழி சமச்சீர் கல்வி முறையின் முக்கியமான அம்சம் தாய்மொழிக் கல்வியாகும். ஆங்கிலேயர் ஆட்சியிலேயே ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக மட்டுமே இருந்தது. எனவே சமச்சீர் கல்வி முறையில் மேல்நிலைப் பள்ளி வரை தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். கடந்த 1999-ல் தமிழ் பயிற்று மொழி குறித்து தமிழக அரசு பிறப்பித்த ஆணையை எதிர்த்து மெட்ரிக் பள்ளிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. 10 ஆண்டுகளாக அது கிடப்பில் உள்ளது. இது குறித்து எடுத்துக் கூறினால் முதல்வர் கருணாநிதி என்மேல் கோபப்படுகிறார். மெட்ரிக் பள்ளிகள் குறித்து கவலைப்படாமல் முத்துக்குமரன் குழுவின் அறிக்கையை அப்படியே நடைமுறைப்படுத்த வேண்டும். இது குறித்து அனைத்துக் கட்சி, கல்வியாளர்கள் குழு அமைத்தால் பாமக அதில் பங்கேற்கும். சமச்சீர் கல்வி முறை குறித்து விளக்குவதற்காகதமிழக மாணவர் சங்கம் சார்பில் கல்விக் கொள்கை மாநாடு நடத்தி வருகிறோம். கடலூர், மதுரை, தருமபுரியில் இந்த மாநாடு ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ளது. இப்போது சேலத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூரில் நடைபெறும் என்றார் ராமதாஸ்.
No comments:
Post a Comment