Sunday, December 6, 2009

சமச்சீர் கல்வி மாநாடு தூத்துக்குடி

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையில்லை
தினமணி

08 Oct 2009


தூத்துக்குடி, அக். 7: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையில்லை என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார். தமிழக மாணவர் சங்கத்தின், தூத்துக்குடி மாவட்டக் கிளை சார்பில் சமச்சீர் கல்வி மாநாடு தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்க மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசியது: சமச்சீர் கல்வி தொடர்பாக அமைக்கப்பட்ட முத்துக்குமரன் குழு பரிந்துரைகளை முழுவதுமாக அமல்படுத்த வேண்டும். 12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும். இடையில் நிறுத்தக் கூடாது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையில்லை என்பதே எனது தனிப்பட்ட கருத்து. படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக சான்றிதழ் வேண்டும் என்பவர்களுக்கு மட்டும் 10-ம் வகுப்பு தேர்வை நடத்தி சான்றிதழ் கொடுக்கலாம். 12-ம் வகுப்பு வரை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் இலவசமாக கல்வியளிக்க வேண்டும். மாணவர்களின் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் வகையில் தரமான கல்வி அளிக்க வேண்டும். கல்வி சுகமானதாக இருக்க வேண்டும். மாணவர்கள் வீட்டிற்கு வரும்போது புத்தகம் உள்ளிட்ட அனைத்தையும் பள்ளியிலேயே வைத்துவிட்டு வரவேண்டும். வீட்டுப் பாடம் இருக்கக் கூடாது. டியூசன் கூடாது. பிளஸ் 2 வரை தேர்வு கூடாது. தமிழ் வழிக் கல்வி வேண்டும். தாய் மொழியில் கல்வி கற்றால்தான் சிந்தனை வளரும் என ஐ.நா. சபையின் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆங்கிலத்தை மொழிப் பாடமாக போதிக்க வேண்டும். 10-ம் வகுப்புக்குள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். தினமும் ஒரு மணி நேரமாவது பள்ளியில் விளையாட நேரம் ஒதுக்க வேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் அது சமச்சீர் கல்வியாக இருக்கும். தமிழக அரசு இதை அமல்படுத்த வேண்டும் என்றார் ராமதாஸ். சமச்சீர் கல்வி தொடர்பாக மாணவ, மாணவியர் கேட்ட கேள்விகளுக்கு ராமதாஸ் பதிலளித்தார். நிகழ்ச்சியில் தமிழக மாணவர் சங்கத் தலைவர் பாரிமோகன், பா.ம.க. தலைவர் கோ.க. மணி, மாநில கொள்கை விளக்க அணித் தலைவர் அ. வியனரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment